Search This Blog

Thursday, 7 February 2008

ஒருபோதும் மறவாத

பல்லவி
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?

அனுபல்லவி
சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை --- ஒருபோதும்

சரணங்கள்
1. கப்பலினடித் தட்டில் - களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால் - கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும் - ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை உனக்கு - ஏற்ற தந்தை நானென்பார் --- ஒருபோதும்

2. கடல் தனக் கதிகாரி - கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை - கற்பித்தாரவர்சேயே,
விடுவாளோ பிள்ளையத் தாய் - மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம் - விசுவாசித்திருப்பாயே --- ஒருபோதும்

3. உன்னாசை விசுவாசம் - ஜெபமும் வீணாகுமா?
உறக்க மில்லாதவர் கண் - உன்னைவிட டொழியுமா?
இந்நில மீதிலுனக் - கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம்? - உருக்கமில்லாதே போமா? --- ஒருபோதும்

4. உலகப் பேயுடலாசை - உன்னை மோசம் செய்யாது,
ஊக்கம் விடாதே திரு - வுளமுனை மறவாது,
இலகும் பரிசுத்தாவி - எழில் வரம் ஒழியாது,
என்றும் மாறாத நண்பன் - இரட்சகருடன் சேர்ந்து --- ஒருபோதும்

Wednesday, 6 February 2008

ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து,
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து - ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் - ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க - ஏசுவையே


பாடல் பிறந்த கதை:

எமனுக்குப் படிப்பு வந்தாலும்
இவனுக்குப் படிப்பு வராது!”

தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் இப்படிக் காட்டிக் கடிந்து கொண்டார். அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றான். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார். ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்.” எனத் தேற்றினார்.

சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!.

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், 1774-ம் ஆண்டு செப்டெம்பர் ஏழாம் தேதி பிறந்தார். தனது 12-வது வயதில் சுவார்ட்ஸ் ஐயரின் வழிநடத்துதலால், இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதுமுதல், அவர் தனது 90-வது வயதில் மரிக்கும்வரை, ஆண்டவர் தனக்குத் தந்த தமிழ்ப் புலமையைக் கொண்டு அவரைத் துதித்து, பல பாடல்களையும், நூல்களையும், பண்ணெடுத்துப் பாடினார். தஞ்சையை அந்நாட்களில் ஆண்டுவந்த சரபோஜி மன்னன், அவரது சிறுவயது நண்பரானார். அவர் சாஸ்திரியாரின் புலமையைப் பாராட்டித் தன் அரசவைக் கவிஞராக வைத்துக் கொண்டார். அவருக்கு மானியமும் வழங்கினார்.

குற்றாலக் குறவஞ்சி,” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சிஎன்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். இப்பாடல் நூலைத் தன் நண்பன் சரபோஜி மன்னனிடம் பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார்.

பின்னர் 1820-ம் ஆண்டு சரபோஜி, மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான். இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். ஏனெனில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான்.

வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து, ஆதரவளித்துவரும் அரசனின் வேண்டுகோள் ஒருபுறம், ஆனால் மற்றொருபுறம், தன்னையே தியாகம் செய்து, அவரைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த அன்பர் இயேசு ஒருவருக்கே செலுத்த வேண்டிய புகழ் ஆராதனை.

மிகுந்த மனப் போராட்டத்துடன், சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தனது தர்ம சங்கடமான நிலையை மனைவியிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார். “ஆண்டவரைப் பாடும் வாயால், இப்படியும் ஒன்றைப் பாடப் போகிறீர்களா? ” என்று கவலையுடன் அவர் மனைவி வினவினார். ஆனால், சாஸ்திரியாரின் உள்ளமோ, ஒரே தெய்வமாகிய, நிகரற்ற இறைவன் இயேசுவின் மீதுள்ள பக்தி வைராக்கியத்தால் பொங்கிப் பாடலாக வழிந்தது. அதுவே இப்பாடலாகும்.

பின்னர், சரபோஜி மன்னரிடம் சென்று, இப்பாடலைப் பாடினார். இறைப்பணியைக் கட்டுப்படுத்தும் பரிசில்களில், தனக்கு நாட்டமில்லை என்பதையும், ஆணித்தரமாகக் கூறினார். இப்பாடலையும் கேட்டு மகிழ்ந்த அரசன், இறைவன் இயேசுவின் மீது வேதநாயகம் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசப் பற்றைப் பெரிதும் பாராட்டினான். “உம் தெய்வத்தைப் பற்றி நீர் எங்கும் தடையின்றி எடுத்துக் கூற, என் அனுமதி உமக்குண்டு”. என்று கூறினான்.

வேதநாயக சாஸ்திரியார் படைத்த,
மனுவுருவானவனைத் தோத்தரிக்கிறேன்-மோட்ச
வாசலைத் திறந்தவனைத் தோத்தரிக்கிறேன்;;
கனிவினைத் தீர்த்தவைனத் தோத்தரிக்கிறேன்-
யூதக் காவலனை ஆவலுடன் தோத்தரிக்கிறேன்;
வேறு எவரையும் தோத்தரியேன்.”

என்ற மற்றொரு கவியிலும், அவரது சிறந்த பக்தி வைராக்கியம் தெளிவாக விளங்குகின்றதல்லவா? தென்னிந்தியத் திருச்சபைகளில் பொதுவாக உபயோகிக்கப்படும், தமிழ்க் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில், அதிகமான பாடல்கள், வேதநாயக சாஸ்திரியாரால் எழுதப்பட்டவை, என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 5 February 2008

என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம் எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?

விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்; - என்ன

1. வானகந் தானோ, - அல்லதிது - வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது; - என்ன

2. போதும் இவ்வாழ்வு, - பரகதி - போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது; - என்ன

3. சாமியைக் கண்டேன், - மகானந்தம் - சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்; - என்ன

4. அன்னமும் நீயே; - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னுறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? - என்ன

Monday, 4 February 2008

எனது கர்த்தரின் ராஜரீக நாள்

பல்லவி
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ ?

அனுபல்லவி
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே --- எனது

சரணங்கள்
1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே --- எனது

2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே --- எனது

3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே --- எனது

4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே --- எனது

Sunday, 3 February 2008

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே!

அன்னை தந்தை யுந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது, இப்போது- என்னை

1. அந்தகாரத்தி னின்றும் பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்,
சொந்த ரத்தக் கிரயத்தால், எனை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ! படைக்கிறேன் - என்னை

2. ஆத்ம சரீர மதை யுமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்;
பாத்ரமதா யதைப் பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கிறேன், கருணைசெய் தேவா - என்னை

3. நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேனுமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை - என்னை

Saturday, 2 February 2008

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்

1. என்ன என் ஆனந்தம், என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே

2. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்

3. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே

4. அச்சயன் பட்சமாய் ரட்சிப்பை எங்களுக்
கருளின தாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றிய சாட்சி
பகர வேண்டியதே

5. வெண்ணங்கி பொன் முடி வாத்தியம் மேல் வீடு
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்

Friday, 1 February 2008

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

பல்லவி
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு ? நீ சொல் , மனமே

சரணங்கள்
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் ,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
மித்திரனே சுகபத்திர மருளும் --- என் மீட்பர்

2. பாபமோ , மரணமோ , நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் ;
சஞ்சலமினியேன் ? நெஞ்சமே , மகிழாய் --- என் மீட்பர்

3. ஆசி செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் --- என் மீட்பர்

4. கவலைகள் தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார் ;
பவமனிப்பளிப்பார் , பாக்கியங் கொடுப்பார் ,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் --- என் மீட்பர்

5. போனது போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,
அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் --- என் மீட்பர்


பாடல் பிறந்த கதை :

போதகர் சாமுவேல் தரங்கம்பாடி, மற்றும் பெங்களுர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தன் வாழ்க்கையில் சோதனைகள் பலவற்றை அனுபவித்தார். தொடர்ந்து வந்த துன்பங்களால் வேதனையுற்று, சோர்வு மேலிட, ஒருநாள் மாலை மயங்கும் வேளையில், சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பாதையில் கிடந்த ஒரு சிறு காகிதத் துண்டைப் பார்த்துக் கையிலெடுத்தார். அதில் "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்," என்ற வேத வசனம் எழுதப்பட்டிருந்தது.

வேத அறிஞராகிய சாமுவேலின் மனக்கண்முன், யோபுவின் வாழ்க்கை திரைப்படம் போல ஓடியது. யோபு கடந்து வந்த பாடுகளைத் தான் அனுபவிக்கும் வேதனைகளோடு, ஒப்பிட்டுப் பார்த்தார். அத்தனைபாடுகள் மத்தியிலும், மனந்தளராது, இவ்வசனத்தின் மூலம் சாட்சி பகிர்ந்த விசுவாச வீரன் யோபுவின் சவால், சாமுவேலுக்குப் புத்துணர்ச்சியையும், தெம்பையும் அளித்தது.

தனது வேதனைப் புலம்பல்களினின்று விடுபெற்ற போதகரின் உள்ளம், புதிய உற்சாகத்தால் நிறைந்தது. இவ்வசனம் அவர் உள்ளத்தில் தந்த நம்பிக்கையே, இப்பாடலாக உருவெடுத்தது. தன் வாழ்க்கையின் சோர்வுகளை இப்பாடலைக் கொண்டு மேற்கொண்டு வெற்றி பெற்றார்.

கருத்து மிகுந்த இப்பாடல், இன்னும் சோர்ந்து போகும் மக்களுக்கு, நம்பிக்கையூட்டும் பாடலாக விளங்குகிறது.

சாமுவேல் ஐயர் எழுதிய "குணப்படு பாவி" என்ற மற்றொரு கீர்த்தனை, திருச்சபை வழிபாட்டில், பாவ அறிக்கைக்கு வழிநடத்தும் பாடலாக உபயோகிக்கப்படுகிறது.