Search This Blog

Saturday, 13 November 2010

திருப்பாதம் நம்பி வந்தேன்

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

சரணங்கள்
இளைப்பாறுதல் தரும் தேவா
கலைத்தொரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன் – திருப்பாதம்

என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கணிவோடென்னை நோக்கிடுமே – திருப்பாதம்

மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
ஏசுவே உம்மை அன்டிடுவேன் – திருப்பாதம்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே – திருப்பாதம்

உம்மை ஊக்கமாய் நோக்கிப்பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே – திருப்பாதம்

சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
ஏசுவே இன்று காட்டிடுமே – திருப்பாதம்

விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரப்பாதை காட்டினீரே
வளர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன் – திருப்பாதம்

பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதராமலே காத்திருப்பேன் – திருப்பாதம்
 .............................................................................................
இந்தப் பாடலுக்கு கிறிஸ்தவ சபைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்தப் பாடலை அதன் அர்த்தத்தை உணர்ந்து பாடும் எவரும் உருகிடுவர். இத்தலைமுறையினரான நமக்கு இந்த பாடலை சபைகளில் (குறிப்பாக தாய்மார்களாகிய பெண்கள்) தூங்கிவழிந்து கொண்டு, இழுத்து இழுத்து பாடுவதை கேட்கும் போது இந்த பாடல் எப்போது முடியும் என்று நமக்கு நினைப்பு வரலாம். ஆனால் இந்த பாடலை எழுதியவர் மிகுந்த கண்ணீரின் அனுபவத்தின் போது இந்த பாடலை எழுதினார். இதன் ஆசிரியர் யார் என்பது எல்லாரும் அறிவர்.
இந்த பாடலை எழுதிய சகோதரி முதலில் சிலோன் பெந்தேகோஸ்தே சபையுடன் இணைந்து ஊழியம் செய்து வந்தார்.அக்காலத்தில் அவர் ஜெபிக்கும்படி நாற்பது நாள் எல்லாரையும் விட்டு விலகி வீட்டில் தனித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இதை தவறாகப் புரிந்து கொண்ட அந்த சபை ஊழியர்கள் ஒரு தவறான கதையை கட்டி விட்டனர்.அதென்னவெனில் அந்த சகோதரி தவறான முறையில் கருத்தரித்ததால்தான் வீட்டில் தனியாக யாரும் பார்க்க முடியாதவாறு இருக்கிறார்கள் என்ற கதையை பரப்பினர். இதனால் சகோதரிக்கு பெரிய நிந்தை உண்டாயிற்று. அவமானத்தை எண்ணி மனம் வெதும்பி ஆண்டவரின் சமூகத்தில் கதறி அழுதார்.
அச்சமயத்தில்தான்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே - திருப்பாதம் நம்பிவந்தேன்

என்று தன் உள்ளத்தில் உள்ள பாரங்கள் யாவையும் ஆண்டவர் சமூகத்தில் ஊற்றி ஜெபித்து இந்த பாடலை எழுதினார்.அவ்வேளையில் நம் ஆண்டவரால் அவர் தேற்றப் பட்டார். இந்த பாடல் இன்றும் பலருக்கு நெருக்கடியான வேளைகளில் தேற்றுவதாய், உள்ளத்தை ஊற்றி ஜெபிக்க உதவுகிறது. நீங்களும் இப்பிண்ணணியத்தை அறிந்தவர்களாய் இப்பாடலின் கவிகளை நோக்கிப் பாருங்கள், பாடுங்கள். பரமனை நோக்குங்கள்.

Music Notes:



F                  Bb      Am      C       F
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
 Gm                          C        F
தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

   Dm                   Bb
இளைப்பாறுதல் தரும் தேவா
      Gm        C        F
களைத்தோரைத் தேற்றிடுமே
  G       Bb         Eb   C
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
  Bb          C        F
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே
என் ஏசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்

கன்னத்தில் அவர் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான் – ஏறுகின்றார்

மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் – ஏறுகின்றார்

இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசுநாதரை
நேசித்து வா குருசெடுத்தே – ஏறுகின்றார்

சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறுகின்றார்

பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறுகின்றார்

செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்த தாயின் அன்பதுவே
எருசலேமே! எருசலேமே
என்றழுதார் கண்கலங்க – ஏறுகின்றார்
 
 

இந்தப் பாடல் கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும் திருவிருந்து நேரங்களில் படப்படுகிற பாடல் ஆகும்.இந்தப் பாடலை நாம் உள்ளம் உருகிப் பாடும்போது ஆண்டவரின் பாடுகளை நேரின் கண்டு வர்ணிக்கிற அனுபவம் நமக்கு உண்டாகிறது.

ஒரு சமயம் பேருந்து ஒன்று மலைமீது வளைந்து வளைந்து ஏறிச் செல்கிறது. அந்தப் பேருந்தில் அதிகமானவர்கள் பயணம் செய்ததால் அப்பேருந்து மலமீது ஏறுவதற்கு சிரமப்பட்டு தள்ளாடி தடுமாறி செனுகொண்டிருக்கிறது. அப்பேருந்தில் பயணம் செய்த சகோதரி சாரோள் நவ்ரோஜி அவர்கள் மலையில் பேருந்து ஏறிச்செல்லும் அழகை கண்டு களித்து இயற்கையுடன் கலந்து அதை ரசிக்கிறார். அந்தவேளையில் தான் அவர் பேருந்து மலைமீது ஏறுவதற்கு சிரமப்படுவதை கவனித்து அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தேவன் அவருக்கு இயேசு கொல்கொதா மலையில் தள்ளாடி தவழ்ந்து ஏறிச்செல்வதை தரிசனமாக காண்பித்தார். அதைக் கண்டவுடன் சகோதரியின் கண்களில் இருந்த் கண்ணீர் தாரைதாரையாகப் புறப்பட்டது.பேருந்து மலைமீது ஏறிச்செல்கிறது. சகோதரியோ இயேசு மலை மீது ஏறிச்செல்வதை தரிசித்துக் கொண்டு தன் அழுகையை அடக்கமுடியாதவர்களாக அழுதவண்ணமாய் பயணம் செய்கிறார். அப்பயணத்தின் விளைவாக அவர் பெற்ற தரிசனம் ஒரு அருமையான பாடலை நமக்குப் பெற்றுத்தந்தது.
நீங்களும் அந்தக் காட்சியை சற்று யோசித்துப் பாருங்கள். இயேசுவின் பாடு நிறைந்த, தாங்கொணா வேதனை நிறை கொல்கொதா பயணம். இயேசு சிலுவையின் பாரத்தினால் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் பாவபாரத்தினாலும் தள்ளாடி தளர்ந்து கீழே விழுந்த அந்த காட்சி.... ஓ இயேசுவே.... நன்றி.

இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்

பல்லவி
இயேசு நேசிக்கிறார் - இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!

சரணங்கள்
1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் --- இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் --- இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் --- இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன் --- இயேசு

5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் --- இயேசு

19ம் நூற்றாண்டில் இலங்கை, யாழ்ப்பாணத்தில் கொலைக்குற்றத்திற்காக தூக்குத்தண்டணை பெற்ற கைதி ஒருவர் சிறையில் இருந்தார். சிறைச்சாலை கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்த நற்செய்தியாளர் ஒருவர் அவரை சந்தித்து அன்பாக பேசி "இயேசு உங்களை நேசிக்கிறார் " என்று கூறினார். கொலைக் குற்றவாளியான தன்னையும் நேசிக்க ஒருவர் உண்டா என்று வியந்த அவர், அதை நம்ப மறுத்து "உண்மையாகவே இயேசு என்ன நேசிக்கிறாரா" என்று வினவினார். அப்போது அந்த நற்செய்திப் பணியாளர் தன் கையிலிருந்த வேதாகமத்தை காட்டி "இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் உண்மை அதுவே" எனப் பகர்ந்தர்.

அதன்பின்பு பலவாரங்கள் தொடர்ந்து அவர்கள் இருவரும் வேதாகமத்தை சேர்ந்து வாசித்து இயேசுவின் அன்பைக் குறித்து சிந்தித்தனர். தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முன்னர் அக்கைதி ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.

அவரை தூக்கிலிட்டபின் அவருடைய உடைமைகளை அவரது சிறை அறையிலிருந்து எடுத்துச் செல்ல அவரது உறவினர் வந்தனர். அப்போது அவரது தலையணைக்குக் கீழே ஒரு சிறு காகிதத்தில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தது.

இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்வின் அனுபவ வரியாக, சாட்சியாக பிரிக்கன்ரிஜ் எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரின் இறுதி நாட்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு நம்பிக்கையுடன் கழிந்தது.

ஓ இயேசுவே நீர் என்னை நேசிக்க என்னிடம் ஒன்றுமில்லையே!

கர்த்தனே எம் துணையானீர்



கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் என் நிழலானீர்
கர்த்தனே என் துணையானீர்


எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார்
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்


பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
இராஜா உம் அன்பு என்னைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை


சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை


ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
இராஜனே உம்மைப் பாடக் கூடுமோ?
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை.

 .................................................................................................


இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரிவுகளும் பிரிவினைகளும் ஏராளம் ஏராளம். போட்டி பொறாமைகளை பார்க்க வேண்டுமெனில் வெறெங்கும் போக வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு அவை கிறிஸ்தவ சபைகளிடையே மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். இன்னும் குறிப்பாக சொல்ல் வேன்டுமெனில், ரோமன் கத்தோலிக்க சபைக்கு பெந்தேகோஸ்தே காரர்களை பிடிக்காது. சி.எஸ்.ஐ காரர்களுக்கு பெந்தேகோஸ்தேகாரர்களையும், தங்களை இடித்துரைக்கும் பிரசங்கிமாரையும் பிடிக்காது.பெந்தே கோஸ்தே காரர்களுக்கு மேற்கண்ட இருவரையுமே பிடிக்காது. அத்துடன் மற்ற பெந்தே கோஸ்தே சபைகளுக்கு போகிறவர்களையும் பிடிக்காது. இதை தூண்டும் போதனைகளும் பிரசங்கங்களும் அதிகம். ஏனெனில் இவர்களின் சபை மட்டும் தான் பரலோகம் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கைதான். இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற கிறிஸ்தவத்துக்கு சொந்தகாரர்களிடம் மாட்டிக் கொண்டு வேதனை அனுபவித்த அனுபவித்துக் கொண்டிருக்கிற தேவ மனிதர் ஏராளம்.

நம் காலத்தைய தலைசிறந்த மிஷனெரிதலைவருள் ஒருவரும், சிறந்த பாடலாசிரியருமான சகோ.எமில் ஜெபசிங் அவர்களும் அதிலொருவர். என்னதான் சிறப்பாக பாடல் இயற்றினாலும் இவர் சி.எஸ்.ஐ சபையை சேர்ந்தவர் என்பதால் பரிசுத்த ஆவி பெறாதவர் என்று பெந்தேகோஸ்தேகாரர் சிலர் இவரை பகடியம் பண்ணினர். எமில் அண்ணன் என்று பாசமாய் அழைக்கப்படும் நம் சகோதரர் இவர்களின் பேச்சினால் மிகுந்த வேதனை அடைந்தார். தேவ சமூகத்தில் ஆறுதலுக்காக அமர்ந்து தன் உள்ளத்தில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி எழுதின பாடல் தான் இந்த "கர்த்தனே எம் துணையானீர்" என்ற அருமையான பாடல். தீமையையும் நன்மையாக மாற்றுகிற நம் தேவன் ஒரு அருமையான பாடலை நமக்கு தந்துள்ளார். அவருக்கே மகிமை. இப்பாடலின் வரிகளை உற்று நோக்கும் போது அவர் அடைந்த வேதனை என்ன தென்பதை நாம் அறிய முடிகிறது. நாம் இப்படிப்பட்ட கொள்கை விபரீதங்களுக்கு விலகியிருப்போமாக. ஏனெனில் நம்முடைய ஒரே எதிரி சாத்தானே! ஆகவே நாம் எல்லாரும் ஒருமனப்பட்டு, ஒற்றுமையாக ஒன்றுகூடி அவனை வீழ்த்துவதுதான் நம் இலட்சியமாக இருக்க வேண்டும். அப்படிபாட்ட நாள்தான் சீக்கிரம் வாராதோ?




ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றிய புரொபசர் எமில் ஜெபசிங் தேவ ஊழியராக மாறி நண்பர் சுவிஷேச ஜெபக்குழுவின் அஸ்திபாரங்களில் ஒருவராக இருந்த முன்னோடி தலைவர் ஆவர். இவரின் ஊழியம் நம் இந்திய தேசத்திற்கே ஒரு ஆசீர்வாதம். சகோதரன் ரஷ்ய தேசத்திற்கு சென்றிருந்த போது அங்கு ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கென்றே ஒரு பிரத்யேக இசை வாசிக்கப் படுவதைக் கேட்டார். அதேபோல தமிழ் கிறிஸ்தவர்களியும் உற்சாகப்படுத்தி தேவனுகாக எழுப்பிவிட ஒரு பாடல் வேண்டும் என்று எண்ணினார். ஆகவே அந்தக் கருத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டதுதான் "உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்" பாடல் ஆகும்.

தேவனே நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்
 .............................................................................
 

தென் தமிழக பாரம்பரிய சபைகளில் மிகவும் பிரபலமாக விளாங்கும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். உண்மையாகப் பாடலின் பொருளை உணர்ந்து பாடும் பக்தர் எவரும் இப்பாடலை படிக்கும்போதே தேவ பிரசன்னத்தை அனுபவிக்கலாம். அனேகர் இந்தப்பாடலை இய்ற்றியது வேத நாயகம் சாஸ்திரியார் என்று நினைக்கின்றனர். இப்பாடலை இயற்றியவர் சந்தியாகு ஐயர் (புராட்டஸ்டாண்டு சபைகளில் போதகரை ஐயர் என்றுதான் அழைப்பர்) ஆவார். இவர் மதுரை ஜில்லாவில் போதக ஊழியம் செய்துவந்தார்.

பெரும்பாலும் அக்காலத்தில் ஆங்கிலப்பாடல்களின் தமிழாக்கத்தையே பாமாலைகளாகப் பாடினர். இன்றுக் கூட தென் இந்திய திருச்சபைகளில் அவ்வாறுதான் பாடுகின்றனர். ஆங்கிலப்பாடல்களை அப்படியே தமிழில் பாடுவது புதிதாக கேட்பவர்க்கு அன்னியமானதாக இருந்தது. என்னதான் அவற்றின் இராகம் இனிமையானதாக இருந்தாலும் வார்த்தைகளை இழுத்து இழுத்து பாடுவது தமிழ் இசை அறிந்தவர்களுக்கு அவ்வாறு பாடுவதை விட நல்ல தமிழிசையில் பாடினால் நலமாயிருக்கும் என்ற எண்ணம் அப்போதிருந்தே இருந்துவந்தது. ஒரு சிலர் ஆங்கிலப்பாடல்களை பொருள் மாறாது தமிழ் யாப்பிலக்கணத்தின் படி தமிழ் இசையில் இசைத்து தந்தனர். அவர்களில் சந்தியாகு ஐயரும் ஒருவர்.


இப்பாடல் உம்மண்டை தேவனே நான் சேர்வதே என்ற பாடலினை தழுவி இயற்றப்பட்டது ஆகும். இப்பாடலின் மூல பாடல் உம்மண்டை தேவனே யாக்கோபின் வாழ்க்கையை பக்தனின் வாழ்க்கையுடன் இணைத்து பாடும் ஒரு அழகான பாடல் ஆகும்.

ஏசுவையே துதி செய்

ஏசுவையே துதிசெய் நீ, மனமே,
ஏசுவையே துதிசெய், - கிறிஸ்தேசுவையே.

சரணங்கள்

1. மாசணுகாத பராபர வஸ்து
நேச குமாரன் மெய்யான கிறிஸ்து.
- ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்.
- ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவுமுகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க.
- ஏசுவையே
……


“எமனுக்குப் படிப்பு வந்தாலும்
இவனுக்குப் படிப்பு வராது!”

தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் இப்படிக் காட்டிக் கடிந்து கொண்டார். அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றான். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார். ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்.” எனத் தேற்றினார்.

சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!.

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், 1774-ம் ஆண்டு செப்டெம்பர் ஏழாம் தேதி பிறந்தார். தனது 12-வது வயதில் சுவார்ட்ஸ் ஐயரின் வழிநடத்துதலால், இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதுமுதல், அவர் தனது 90-வது வயதில் மரிக்கும்வரை, ஆண்டவர் தனக்குத் தந்த தமிழ்ப் புலமையைக் கொண்டு அவரைத் துதித்து, பல பாடல்களையும், நூல்களையும், பண்ணெடுத்துப் பாடினார். தஞ்சையை அந்நாட்களில் ஆண்டுவந்த சரபோஜி மன்னன், அவரது சிறுவயது நண்பரானார். அவர் சாஸ்திரியாரின் புலமையைப் பாராட்டித் தன் அரசவைக் கவிஞராக வைத்துக் கொண்டார். அவருக்கு மானியமும் வழங்கினார்.

“குற்றாலக் குறவஞ்சி,” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சி” என்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். இப்பாடல் நூலைத் தன் நண்பன் சரபோஜி மன்னனிடம் பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார்.

பின்னர் 1820-ம் ஆண்டு சரபோஜி, மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான். இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். ஏனெனில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான்.

வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து, ஆதரவளித்துவரும் அரசனின் வேண்டுகோள் ஒருபுறம், ஆனால் மற்றொருபுறம், தன்னையே தியாகம் செய்து, அவரைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த அன்பர் இயேசு ஒருவருக்கே செலுத்த வேண்டிய புகழ் ஆராதனை.

மிகுந்த மனப் போராட்டத்துடன், சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தனது தர்ம சங்கடமான நிலையை மனைவியிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார். “ஆண்டவரைப் பாடும் வாயால், இப்படியும் ஒன்றைப் பாடப் போகிறீர்களா? ” என்று கவலையுடன் அவர் மனைவி வினவினார். ஆனால், சாஸ்திரியாரின் உள்ளமோ, ஒரே தெய்வமாகிய, நிகரற்ற இறைவன் இயேசுவின் மீதுள்ள பக்தி வைராக்கியத்தால் பொங்கிப் பாடலாக வழிந்தது. அதுவே இப்பாடலாகும்.

பின்னர், சரபோஜி மன்னரிடம் சென்று, இப்பாடலைப் பாடினார். இறைப்பணியைக் கட்டுப்படுத்தும் பரிசில்களில், தனக்கு நாட்டமில்லை என்பதையும், ஆணித்தரமாகக் கூறினார். இப்பாடலையும் கேட்டு மகிழ்ந்த அரசன், இறைவன் இயேசுவின் மீது வேதநாயகம் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசப் பற்றைப் பெரிதும் பாராட்டினான். “உம் தெய்வத்தைப் பற்றி நீர் எங்கும் தடையின்றி எடுத்துக் கூற, என் அனுமதி உமக்குண்டு”. என்று கூறினான்.

வேதநாயக சாஸ்திரியார் படைத்த,
“மனுவுருவானவனைத் தோத்தரிக்கிறேன்-மோட்ச
வாசலைத் திறந்தவனைத் தோத்தரிக்கிறேன்;;
கனிவினைத் தீர்த்தவைனத் தோத்தரிக்கிறேன்-
யூதக் காவலனை ஆவலுடன் தோத்தரிக்கிறேன்;
வேறு எவரையும் தோத்தரியேன்.”

என்ற மற்றொரு கவியிலும், அவரது சிறந்த பக்தி வைராக்கியம் தெளிவாக விளங்குகின்றதல்லவா? தென்னிந்தியத் திருச்சபைகளில் பொதுவாக உபயோகிக்கப்படும், தமிழ்க் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில், அதிகமான பாடல்கள், வேதநாயக சாஸ்திரியாரால் எழுதப்பட்டவை, என்பது குறிப்பிடத்தக்கது

ஆனந்தமே பரமானந்தமே இயேசு

இயற்றியவர் - சாது கொச்சிக் குஞ்ஞு
 
 ஆனந்தமே பரமானந்தமே
பல்லவி
ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

சரணங்கள்
1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே

2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே

3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே

4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே

5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே

6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே


சாது சுந்தர் சிங் அவர்களின் ஊழியத்தின் தாக்கத்தினால் பலரும் துறவற கோலம் பூண்டு சாதுவாக ஊழியம் செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாது கொச்சிக்குஞ்ஞு ஆவார். இவர் பல இடங்களுக்கும் சென்று சுவிசேஷ ஊழியம் செய்துவந்தார். இவர் தன் ஊழியத்தில் மெட்ராஸ் பட்டணத்தில் (இன்றைய சென்னை) ஒரு சிறிய வீடு ஒன்றை வாடகைகு எடுத்து ஊழியம் செய்து வந்தார்.அக்கால கட்டத்தில் அவரால் வீட்டு வாடகைபணத்தை கொடுக்க முடியாதவாறு வறுமையில் உழன்றார்.
பல மாதங்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வீட்டு உரிமையாளர் ஒரு நாள் கோபத்துடன் சாது அவர்களின் சாமான்களையெல்லாம் வீட்டைவிட்டு வெளியே எறிந்து, சாதுவையும் அடித்து கீழே தள்ளிவிட்டார். வலி தாளாமல் வேதனையுடன் கீழே விழுந்தவர்,ஆண்டவரே உம்முடைய ஊழியத்தை செய்கிற எனக்கு ஏன் இந்த நிலைமை? எனக்கு இப்போது தங்க வீடு இல்லையே என்று வேதனையுடன் இயேசுவை நோக்கிக் கதறினார். அப்போது அந்த க்ஷணத்தில் அவர் மனதில்,"மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" என்ற வசனத்தை ஆவியானவர் அவருக்கு நினைவு படுத்தினார். மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை , தனக்கு தெருவில் இந்த இடமாவது கிடைத்துள்ளதே என்று சிந்தித்தார். அந்த வேளையில் தானே அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவராய் எழுந்து நின்று சந்தோச மிகுதியால், அன்னிய பாஷையால் நிரப்பப்பட்டவராய்,

இந்த புவி ஒரு சொந்தமல்லவென்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் பக்தர்க்கு
இங்கேயே பங்காக கிடைத்திடினும்

ஆனந்தமே பரமானந்தமே இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்ரும் சொல்லலாமோ
கைவேல யல்லாத வீடொன்றை தந்திடுவேன்
என்று சொல்லிப் போகலையோ

ஆனந்தமே பரமானந்தமே இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே என்றுப் பாடிக்கொண்டு
தெருவில் நடனமாடத்துவங்கிவிட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டு உரிமையாளருக்கு ஒன்றுமே விளங்க வில்லை. நாம் இவனை அடித்து போட்டோம்,இவனோ இப்படி ஆடுகிறானே ஒருவேளை நாம் அடித்ததில் இவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று நினைத்துக் கொண்டு, சாதுவை நிறுத்த முயற்சி செய்தார். சாதுவோ தான் ஆடுவதை நிறுத்தாமல் தொடர்ந்து தேவனைப் பாடி, அன்னிய பாஷையில் துதித்துக் கொண்டிருந்தார். கடைசியாக ஒருவழியாக சாதுவை நிறுத்திய அந்த வீட்டின் உரிமையாளர் சாதுவிசம் அவரின் சந்தோசத்திற்காண காரணத்தை கேட்டார். சாது இன்னமும் தேவனை துதிப்பதை நிறுத்தாமல்," மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை- எனக்கு இந்த தெருவில் ஆண்டவர் ஒரு இடம் கொடுத்துள்ளாரே. என்னால் எப்படி சந்தோசமடையாமல் இருக்க முடியும் என்று கூறினார். இதைகேட்ட அந்த மனிதன் சாதுவின் உண்மையான ஊழியத்தை உணர்ந்து, "ஐயா, நீங்கள் எவ்வளவு மாதம் வேண்டுமென்றாலும் இந்த் வீட்டில் இருந்து ஊழியம் செய்ய்யுங்கள்.எனக்கு வாடகை எதுவும் தர வேண்டாம்" என்று கூறி தான் வீட்டை விட்டு வெளியே தூக்கியெறிந்த பொருட்களையெல்லாம் மறுபடியும் வீட்டினுள் எடுத்து வைத்து விட்டு சென்றார்.

இயேசுவே கிருபாசனப்பதியே

இராகம்: காம்போதி  
தாளம்: ஆதி
    பல்லவி

    இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட
    இழிஞன் எனை மீட்டருள்,
    இயேசுவே கிருபாசனப்பதியே
   
    சரணங்கள்

1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவு
    கண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா,
    நேசமாய் ஏழைக்கிரங்கி மோசம் அணுகாது காத்து
    நித்தனே எனைத்திருத்தி வைத்தருள் புத்தி வருத்தி - இயேசுவே

2. பேயுடைச் சிறையதிலும் காயவினைக் கேடதிலும்
    பின்னமாக சிக்குண்ட துர் கன்மி ஆயினேன்
    தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட
    தேவனே எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி - இயேசுவே

3. சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
    தீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே;
    குறை ஏதுனை அண்டினோர்க்கிறைவா எனைச் சதிக்கும்
    குற்றங்கள் அறவே தீர்த்து முற்று முடியக் கண்பார்த்து - இயேசுவே

4. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை
    புண்ணியனே உன் சரணம் நண்ணி அண்டினேன்;
    எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி?
    இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து - இயேசுவே
.....................................

எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த அருமையான இந்த பாடலை எழுதிய ஜான் பால்மர் 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டு, நாகர்கோவில் பகுதியில் மிஷனரிகளுடன் சேர்ந்து, உற்சாகமாக நற்செய்திப் பணியாற்றினார். பால்மர் பல பாடல்களை எழுதிய சிறந்த கவிஞராவார். அவர் ஆண்டவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை அழகாகச் சித்தரிக்கும் “கிறிஸ்தாயணம்,” என்ற காவியத்தை உருவாக்கியிருக்கிறார்.
பால்மர் திருவனந்தபுரத்தில் அரசு அச்சகத்தில் பணியாற்றி வந்தார். நாதஸ்வர இசையைக் கேட்டு ரசிப்பது, அவருக்கு விருப்பமான பொழுது போக்காகும். எனவே, அவர் கேட்கும் இசையின் ராகத்தில் லயித்து, பரவசமாகப் பாடல்களை எழுதிவிடுவார்.
அந்நாட்களில், பொது இடங்களில் நாதஸ்வர இசைக்கச்சேரிகள் நடத்தப்படுவதில்லை. திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற பத்மனாப சுவாமி கோவிலில், தினந்தோறும், அதிகாலைப் பூசை வேளையில், நாதஸ்வர இசை வாசிக்கப்படும். ஆனால், அக்கோவிலில் கிறிஸ்தவர் எவரும் நுழைந்தால், அவர்களுக்கு மரண தண்டனை உண்டு. எனினும், பால்மர் தன் உயிரையும் பொருட்படுத்தாது. ஒரு போர்வையால் தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டு, நாதஸ்வர இசையைக் கேட்கச் செல்லுவார். கேட்டு மகிழ்ந்த அதே ராகத்தில், அன்றே, ஆண்டவரைப் போற்றி, அழகான ஒரு பாடல் உருவாகிவிடும்.
இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையின் வழியே, உயிரைப் பணயம் வைத்து எழுதப்பட்ட அருமையான பாடல் தான், “இயேசுவே கிருபாசனப் பதியே” ஆகும்.
பால்மர், தமது 71 ஆண்டு கால வாழ்க்கையில், பல துன்பங்களுக்கும், வேதனை நிறைந்த அனுபவங்களுக்கும் உள்ளாயிருக்க வேண்டும். இவ்வுலக மக்களால் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்க வேண்டும். அடுக்கடுக்காய் வந்த இச்சோதனைகளால் தன் உள்ளம் சோர்ந்துபோகாதபடி, அவர் இறைவனின் துணையை நாடி, அவற்றின் மீது வெற்றியையும் பெற்றிருக்க வேண்டும். இவ்வனுபவமே அவரை, நாம் விரும்பிப் பாடும், “வாராவினை வந்தாலும் சோராதே மனமே,” என்ற சிறந்த ஆறுதல் பாடலை எழுதத் து}ண்டியிருக்கும்.
ஜான் பால்மர் இயற்றிய ஏனைய பாடல்களில் பிரபலமானவை:
1. பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே
2. ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே
3. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் (மகிழ் கொண்டாடுவோம்)
4. உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே
5. கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே நல்ல கேடகத்தைப் பிடி நீ

சருவ லோகாதிபா நமஸ்காரம்

1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.

2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய், நமஸ்காரம்.

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றில் ஒன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணை சொருபா,
நித்ய திரியேகா, நமஸ்காரம்.

…..................................................................................
இந்த அருமையான துதிப் பாடலை எழுதிய அருள் திரு. வேதமாணிக்கம், 1864-ம் ஆண்டு கல்லுக் கூட்டத்தில், மதுரநாயகம். - தேவாயி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த வேதமாணிக்கத்தை அவரது தாயார் தெய்வ பக்தியில் வளர்த்தார். தனது 20-வது வயதில், வேதமாணிக்கம் மத்திகோடு சபையைச் சார்ந்த இராகேலை மணம்புரிந்தார்.
வேதமாணிக்கம் தனது உயர் படிப்பை முடித்து அரசு அதிகாரியாக வேலையிலமர்ந்தார். பக்தி, விசுவாசம், மற்றும் சிறப்பாக, ஜெபம் ஆகியவற்றில் அதிக வாஞ்சையுள்ளவராக விளங்கினார். உலகப் பொருளுக்கோ, பணத்திற்கோ மனதில் இடம் கொடாது, மண்தரை போட்ட, ஓலை வேய்ந்த குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஆங்கிலேயரான அவரது மேலதிகாரி, அவரை நோக்கி, “வேத மாணிக்கம், நீ வேதம் ஒத வேண்டியவன்@ இங்கு எப்படி வேலை செய்யலாம்?” என்று கேட்டார். இக்கேள்வி வேதமாணிக்கத்தின் உள்ளத்தில் பதிந்தது.
ஆழ்ந்து சிந்தித்த வேதமாணிக்கம், நற்செய்திப் பணியில் கொண்ட ஆர்வத்தால், உடனே அரசு வேலையை இராஜிநாமா செய்து விட்டு, மிஷனில் ஆசிரியராகவும், பின்னர் மிஷன் பள்ளிகளின் ஆய்வாளராகவும் பணியாற்றினார். சிறிது காலம் மத்திகோடு சபை உபதேசியராக ஊழியம் செய்தபின், 1912-ம் ஆண்டு கல்லுக்கூட்டம் திருச்சபைப் போதகரானார். பட பாடல்களை இயற்றி, இன்னிசையுடன் நற்செய்தி அளித்து வந்தார்.
தன்னை ஒறுத்து ஊழியம் செய்த போதகர் வேதமாணிக்கத்தின் ஆலய ஆராதனையில், மக்கள் திரள் கூட்டமாகப் பங்கேற்றனர். அவர் வாலிபர்களை நல்வழிப் படுத்த “சுவிசேஷப் படையெழுச்சி,” என்ற திறந்த வெளிக் கூட்டங்களை நடத்தினார். இந்நிகழ்ச்கிகளில் பாட, “சுவிசேஷப் படையெழுச்சிக் கீதங்கள்,” என்ற 16 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தை வெளியிட்டார். ஞாயிறு தோறும் மாலை நேரத்தில், பெண்களுக்குச் சிறப்பு வேதப் பயிற்சிக் கூட்டங்களை, வீடுகளில் நடத்தினார். கண்ணியமும், நேர்மையும் நிறைந்த போதகர் வேதமாணிக்கம், ஊர்ப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஊர்க்கூட்ட நடுவராகவும் சமுதாயப் பணி செய்தார்.
ஆண்டவரின் ஊழியப் பாதையில் தன்னுடையது அனைத்தையும் அர்ப்பணம் செய்த வேதமாணிக்கத்தின் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதித்தார். அவரது மூன்று பையன்களுக்கும், மூன்று பெண்பிள்ளைகளுக்கும், தேவன் நல்ல படிப்பு, வேலை, மற்றும் இசை ஞானத்தைத் தந்தார். வயலின் தான் அவர்களின் குடும்ப வாத்தியம். அதில் அவர்கள் அனைவரும் மேதைகளாக விளங்கினார்கள். எனவே, குடும்பமாகப் பல இடங்களுக்குச் சென்று, நற்செய்திக் கூட்டங்களையும், கதாகாலட்சேபங்களையும் நடத்தி வந்தனர். வெள்ளி, மற்றும் ஞாயிறு இரவு ஜெபக் கூட்டங்கள் வாத்தியக்கருவிகளுடன் பாட்டுகள் முழங்க நடைபெற்றன.
1917-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி, அருள்திரு. வேதமாணிக்கம் மார்த்தாண்டத்திலுள்ள தனது மனைவியின் தங்கை வீட்டிற்குச் செல்ல பஸ்ஸில் ஏறும்போது தவறி விழுந்ததில், பேருந்தின் சக்கரம் அவரது காலில் ஏறிக் காயம் ஏற்பட்டது. அத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், மார்த்தாண்டத்தில், மூன்றாம் நாளில், 10-5-1917 அன்று, தனது 53-வது வயதில் மரணமடைந்தார். அவர் இயற்றிய, “ஆ! இன்ப காலமல்லோ,” “ஜீவ வசனம் கூறுவோம்,” என்ற பாடல்களும், திருச்சபைக் கீர்ததனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

சோர்ந்து போகாதே என் நண்பனே



Dm                            Gm
சோர்ந்து போகாதே என் நண்பனே
       C                              F A
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
    Dm                C
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
   A           Dm
நீ கலங்காதே மனமே
.
Dm
இயேசு உன்னை தேற்றிடுவார்
Bb
இயேசு உன்னை காத்திடுவார்
Gm                                   A
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே - 2
.
Dm                             Gm
என் ஆத்மநேசர் முன் செல்கையில்
C                      F A
நான் என்றுமே அஞ்சிடேன்
   Dm             C
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர்
A                Dm
தினமும் நடத்துவார்
.
நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும்
மனம் கலங்காதே திகையாதே உன்
இயேசு இருக்கிறார்