Search This Blog

Monday 23 April 2007

துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

பல்லவி
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே --- ஆ! அற்புதமே

3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே



பாடல் பிறந்த கதை:

இந்தப் பிரபல பாடலை எழுதி, ராகமும் அமைத்து, பல இடங்களில் ஆண்டவரை உற்சாகமாயத் துதித்துப் பாடிவரும் சகோதரி சாராள் நவரோஜியை, கிறிஸ்தவ சமுதாயமனைத்தும் நன்கு அறியும். கடந்த 40 ஆண்டுகளாக, இசைவழி இறைப்பணி செய்துவரும் இச்சகோதரியின் மூலம் கிறிஸ்தவ உலகிற்கு தேவன் அருளிய பாடல்களின் எண்ணிக்கை 361 ஆகும்.

சகோதரி சாராள் நவரோஜி 60 ஆண்டுகளுக்கு முன் ஊழிய வாஞ்சை நிறைந்த பெற்றோருக்குப் பிறந்தார். இவரது தந்தை திரு சாலமோன் ஆசீர்வாதம் ஒரு கர்நாடக இசை மேதையாவார். அவரது முன்னோர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். மதுரை அழகர் கோவிலில் பாடல்களைப் பாடிவந்தவர்கள். திரு. சாலமோன், சாது சுந்தர்சிங்கின் மூலம் நற்செய்தியை அறிந்து, ஆண்டவரை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், கர்நாடக இசையில் ஆண்டவரைத் துதித்துப் பல பாடல்களை இயற்றிப் பாடினார். லுத்தரன் திருச்சபை நாட்டையர்களுக்குப் பாடக் கற்றுக் கொடுத்தார். சகோதரியின் தாயார் திருமதி. சவுந்தரம் அம்மையார் 1924-ம் ஆண்டுமுதல், வெளிநாட்டு மிஷனரிச்சகோதரிகளுடன் சேர்ந்து, தென்னகத்தில் சிறுவர் ஊழியத்தை ஆரம்பித்து நடத்திய முன்னோடிச் சிறுவர் மிஷனரியாவார்.

இத்தகைய பெற்றோருக்குப் பிறந்த சகோதரி சாராள், லுத்தரன் திருச்சபையைச் சேர்ந்தவர். பின்னர், தனது 14-வது வயதில், பிரதரன் அசெம்பிளி நடத்திய நற்செய்திக் கூட்டத்தில் இயேசுவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். தனது 18-வது வயதிலே, பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றார். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, 1956-ஆம் ஆண்டு முதல், பாடல்களை இயற்றி, ராகமமைத்துப் பாடி, இசைத் தொண்டாற்றி வருகிறார்.

சென்னை மின்சார வாரியத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த நாட்களில், சகோதரி சாராள், ஆண்டவரின் அழைப்பைப் பெற்றார். எனவே, 1959-ம் ஆண்டு, தனது இருபதாவது வயதில், முழுநேரப் பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். 1959 முதல் 1962 வரை இலங்கையில் வேதாகமத்தில் பயிற்சி பெற்று, ஊழியம் செய்தார். பின்னர் தமிழகம் திரும்பி, திருச்சபைகளைச் சந்தித்து, உயிர்மீட்சிக் கூட்டங்களை நடத்தி, ஆவியில் அனல் மூட்டினார். சென்னையில், சீயோன் சுவிசேஷ ஜெப ஐக்கிய சபையை ஸ்தாபித்து, தேவ பணியை அருகிலும், தூரத்திலும் உள்ள கிராமங்களில் தொடர்ந்து உத்தமமாய்ச் செய்து வருகிறார்.

சகோதரி சாராள் நவரோஜி 60 வயதைச் தாண்டிய பின்னரும், ஓய்வின்றி, உற்சாகமாய்ப் பாடல்களை எழுதியும், ராகமைத்துப்பாடியும், தேவ செய்திகள் அளித்தும் வருகிறார். இவர் எழுதிய பாடல்களில் 350 பாடல்கள் தமிழ் மலையாளம் ஆங்கில மொழிகளில் கேசட்டுகளாகவும், டிஸ்குகளாகவும் வெளிவந்துள்ளன.

தனிச்திருச்சபை ஊழியத்தைச் செய்தாலும், சகோதரியின் இசைவழி இறைப்பணியால் பயன்பெற திருச்சபைகள், பல பிரிவுகளைச் சேர்ந்தவை. இவற்றுள் தென்னிந்தியத் திருச்சபையின் திருநெல்வேலித் திருமண்டலத் திருச்சபைகள் பல உண்டு. சகோதரியின் வாஞ்சையெல்லாம் அனைத்துக் கிறிஸ்தவத் திருச்சபைகளும் சபைப் பாகுபாடின்றி, சகோதரியின் இசை ஊழியத்தால் பயன்பெற வேண்டுமென்பதே. எனவே, சகோதரி வெளியிட்டுள்ள 33 கேசட்டுகளை வாங்கிக் கேட்டு, ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெறலாமே!..

1 comment:

  1. இயேசுவின் இரண்டாம் வருகை வரை சகோதரியின் பாடல்கள் இப்பூமி்யில் நிலைத்து நிற்கும்.

    ReplyDelete