Search This Blog

Saturday, 14 April 2007

குயவனே குயவனே

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

1.வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

2.விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே

3.மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே



பாடல் பிறந்த கதை:

1980-ம் ஆண்டின் லெந்து நாட்கள்.

சென்னை இந்திய வேதாகமக் கல்லூரியின் ஆசிரியர்கள் அறையில்:

ராஜன்! ஒரு நல்ல செய்தி தெரியுமா? நமது கல்லூரியின் பாடகர் குழுவுக்கு, இன்னிசையில் நற்செய்திப்பணி செய்ய, பம்பாயிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது! நீங்களும் எங்களோடு வரவேண்டும்.”

என உற்சாகமாய்த் தன் சக விரிவுரையாளரிடம் செய்தியைப் பகிர்ந்து கொண்டார் சகோதரர் பிரேம்குமார், அவர் C.S.I. திருநெல்வேலி திருமண்டலப் பேராயரான மாமறைத்திரு ஜேசன் தர்மராஜின் சகோதரராவார்.

ரொம்ப சந்தோஷம், பிரேம். ஆனால், லெந்து நாட்களின் முடிவாக இருக்கும் இந்நாட்களில், பரிசுத்த வார நிகழ்ச்சிகளுக்கு நான் ஆயத்தம் செய்ய வேண்டுமே, ஆகவே, நீங்கள் சென்று வாருங்கள் நான் இங்கிருந்து உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்துக் கொள்கிறேன்.”

இல்லை ராஜன்; 25 பேர் கொண்ட மாணவர் குழுவை நான் மட்டும் தனியாக வழிநடத்துவது கடினமான காரியம். மேலும், நீங்கள் ஒரு நல்ல பாடகர். உங்களின் தனிப்பாடல்களைக் கொண்டு, நமது ஊழியத்தை இன்னும் சிறப்பாகச் செய்யலாமே. பல இடங்களில் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். அவற்றில் நற்செய்தியை அளிப்பதற்கு, நீங்களும் என்னுடன் சேர்ந்து பங்கேற்றால், எனக்கு உதவியாக இருக்கும்.”

தன் நண்பரின் வற்புறுத்தலின் பேரில், அக்குழுவுடன் இணைந்து ராஜன் பம்பாய்க்குப் பயணமானார். தேவன் அவர்களுடைய பம்பாய் ஊழியங்களை அபரிதமாய் ஆசீர்வதித்தார்.

அந்நிகழ்ச்சிகளில் அளிக்கப்பட்ட செய்திகளின் மையப்பொருள், “குயவனின் களிமண்ஆகும். ராஜன், தானே ஒரு செய்தியாளராக அங்கு விளங்கினாலும், தன் சக ஊழியரின் செய்தியையும், தன் உள்ளத்தில் பதியச் செய்தார். சென்னைக்குத் திரும்பியவுடன், இப்பாடலை இந்த மையப்பொருளின் அடிப்படையில் இயற்றினார்.

சகோதரர் ராஜனுடன் பம்பாய் ஊழியத்தில் கலந்து கொண்டு கித்தார் இசைத்த மாணவர் ஒருவர், தனது வேனிற்கால விடுமுறைக்கு முன், ராஜனைச் சந்தித்துப் பேச அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜன், தான் புதிதாக இயற்றிய இப்பாடலைப் பாடிக் காட்டினார். அம்மாணவர் இப்பாடலை மிகவும் ரசித்துக் கேட்டுப் பாராட்டினார். பின்னர், நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு தங்களின் கூட்டங்களிலும், தாம்பரம் பிலடெல்பியா சபையைச் சேர்ந்த சகோதரர் பாஸ்கரதாஸ் தமது ஊழியங்களிலும் இப்பாடலைப் பாடி, பிரபலமாக்கினார்.

1981-ம் ஆண்டு ராஜன் இந்திய வேதாகமக் கல்லூரியில் முழுநேரப் பேராசிரியராகச் சேர்ந்து 7 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். அந்நாட்களில் அக்கல்லூரியின் தமிழ்ப்பாடகர் குழுவின் தலைவராகவும் இருந்தார். 1988-ம் ஆண்டு, ராஜனின் தந்தையின் சுகவீனத்தினிமித்தம், அவர் அதுவரை நடத்திவந்த மணி வாத்தியார் ஆரம்பக் கல்வி நிலையத்தின் பொறுப்பை, ராஜன் மேற்கொண்டார். முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, சுமார் 850 பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியை, ராஜன் இன்றும் திறம்பட நடத்தி வருகிறார். இப்பள்ளியின் வாராந்திரப் பொதுக் காலை தியானக்கூட்டத்தில், பிள்ளைகளுக்கு நற்செய்தியை அறிவித்து வருகிறார்.

Friday, 13 April 2007

திருப்பாதம் நம்பி வந்தேன்

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே

1. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தங்கிடுவேன்

2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

5. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

6. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னை தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

7. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீர பாதை காட்டிடுமே
வளர்ந்து கனி தரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்.


பாடல் பிறந்த கதை:

இந்தப் பாடலுக்கு கிறிஸ்தவ சபைகளில் ஒரு சிறப்பான இடம் உண்டு. இந்தப் பாடலை அதன் அர்த்தத்தை உணர்ந்து பாடும் எவரும் உருகிடுவர். இத்தலைமுறையினரான நமக்கு இந்த பாடலை சபைகளில் (குறிப்பாக தாய்மார்களாகிய பெண்கள்) தூங்கிவழிந்து கொண்டு, இழுத்து இழுத்து பாடுவதை கேட்கும் போது இந்த பாடல் எப்போது முடியும் என்று நமக்கு நினைப்பு வரலாம். ஆனால் இந்த பாடலை எழுதியவர் மிகுந்த கண்ணீரின் அனுபவத்தின் போது இந்த பாடலை எழுதினார். இதன் ஆசிரியர் யார் என்பது எல்லாரும் அறிவர்.

இந்த பாடலை எழுதிய சகோதரி முதலில் சிலோன் பெந்தேகோஸ்தே சபையுடன் இணைந்து ஊழியம் செய்து வந்தார்.அக்காலத்தில் அவர் ஜெபிக்கும்படி நாற்பது நாள் எல்லாரையும் விட்டு விலகி வீட்டில் தனித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இதை தவறாகப் புரிந்து கொண்ட அந்த சபை ஊழியர்கள் ஒரு தவறான கதையை கட்டி விட்டனர்.அதென்னவெனில் அந்த சகோதரி தவறான முறையில் கருத்தரித்ததால்தான் வீட்டில் தனியாக யாரும் பார்க்க முடியாதவாறு இருக்கிறார்கள் என்ற கதையை பரப்பினர். இதனால் சகோதரிக்கு பெரிய நிந்தை உண்டாயிற்று. அவமானத்தை எண்ணி மனம் வெதும்பி ஆண்டவரின் சமூகத்தில் கதறி அழுதார்.
அச்சமயத்தில்தான்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே - திருப்பாதம் நம்பிவந்தேன்

என்று தன் உள்ளத்தில் உள்ள பாரங்கள் யாவையும் ஆண்டவர் சமூகத்தில் ஊற்றி ஜெபித்து இந்த பாடலை எழுதினார்.அவ்வேளையில் நம் ஆண்டவரால் அவர் தேற்றப் பட்டார். இந்த பாடல் இன்றும் பலருக்கு நெருக்கடியான வேளைகளில் தேற்றுவதாய், உள்ளத்தை ஊற்றி ஜெபிக்க உதவுகிறது. நீங்களும் இப்பிண்ணணியத்தை அறிந்தவர்களாய் இப்பாடலின் கவிகளை நோக்கிப் பாருங்கள், பாடுங்கள். பரமனை நோக்குங்கள்.

Thursday, 12 April 2007

ஏறுகின்றார் தள்ளாடி

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1.கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு

2.மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் - ஏறு

3.இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே - ஏறு

4.சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு

5.பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு

6.செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க - ஏறு


பாடல் பிறந்த கதை:

இந்தப் பாடல் கிட்டத்தட்ட எல்லா சபைகளிலும் திருவிருந்து நேரங்களில் படப்படுகிற பாடல் ஆகும்.இந்தப் பாடலை நாம் உள்ளம் உருகிப் பாடும்போது ஆண்டவரின் பாடுகளை நேரின் கண்டு வர்ணிக்கிற அனுபவம் நமக்கு உண்டாகிறது.

ஒரு சமயம் பேருந்து ஒன்று மலைமீது வளைந்து வளைந்து ஏறிச் செல்கிறது. அந்தப் பேருந்தில் அதிகமானவர்கள் பயணம் செய்ததால் அப்பேருந்து மலமீது ஏறுவதற்கு சிரமப்பட்டு தள்ளாடி தடுமாறி செனுகொண்டிருக்கிறது. அப்பேருந்தில் பயணம் செய்த சகோதரி சாரோள் நவ்ரோஜி அவர்கள் மலையில் பேருந்து ஏறிச்செல்லும் அழகை கண்டு களித்து இயற்கையுடன் கலந்து அதை ரசிக்கிறார். அந்தவேளையில் தான் அவர் பேருந்து மலைமீது ஏறுவதற்கு சிரமப்படுவதை கவனித்து அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தேவன் அவருக்கு இயேசு கொல்கொதா மலையில் தள்ளாடி தவழ்ந்து ஏறிச்செல்வதை தரிசனமாக காண்பித்தார். அதைக் கண்டவுடன் சகோதரியின் கண்களில் இருந்த் கண்ணீர் தாரைதாரையாகப் புறப்பட்டது.பேருந்து மலைமீது ஏறிச்செல்கிறது. சகோதரியோ இயேசு மலை மீது ஏறிச்செல்வதை தரிசித்துக் கொண்டு தன் அழுகையை அடக்கமுடியாதவர்களாக அழுதவண்ணமாய் பயணம் செய்கிறார். அப்பயணத்தின் விளைவாக அவர் பெற்ற தரிசனம் ஒரு அருமையான பாடலை நமக்குப் பெற்றுத்தந்தது.

நீங்களும் அந்தக் காட்சியை சற்று யோசித்துப் பாருங்கள். இயேசுவின் பாடு நிறைந்த, தாங்கொணா வேதனை நிறை கொல்கொதா பயணம். இயேசு சிலுவையின் பாரத்தினால் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் பாவபாரத்தினாலும் தள்ளாடி தளர்ந்து கீழே விழுந்த அந்த காட்சி.... இயேசுவே.... நன்றி.

Wednesday, 11 April 2007

இயேசு நேசிக்கிறார்

இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ?

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன் தன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிழல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து நாட்கழிந் துலைந்தும்
நீதன் இயேசென்னை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை அன்பாஇ நேசிக்கிறார்
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளே
ஆவலாய் பறப்ப்பேன்

5. ராசன் இயேசுவின்மேல் இன்பக் கீதஞ்சொலில்
ஈசன் இயேசெனை தானேசித்தாரென்ற
இணையில் கீதஞ்சொல்வேன்



பாடல் பிறந்த கதை:

19ம் நூற்றாண்டில் இலங்கை, யாழ்ப்பாணத்தில் கொலைக்குற்றத்திற்காக தூக்குத்தண்டணை பெற்ற கைதி ஒருவர் சிறையில் இருந்தார். சிறைச்சாலை கைதிகள் மத்தியில் ஊழியம் செய்து வந்த நற்செய்தியாளர் ஒருவர் அவரை சந்தித்து அன்பாக பேசி "இயேசு உங்களை நேசிக்கிறார் " என்று கூறினார். கொலைக் குற்றவாளியான தன்னையும் நேசிக்க ஒருவர் உண்டா என்று வியந்த அவர், அதை நம்ப மறுத்து "உண்மையாகவே இயேசு என்ன நேசிக்கிறாரா" என்று வினவினார். அப்போது அந்த நற்செய்திப் பணியாளர் தன் கையிலிருந்த வேதாகமத்தை காட்டி "இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் உண்மை அதுவே" எனப் பகர்ந்தர்.

அதன்பின்பு பலவாரங்கள் தொடர்ந்து அவர்கள் இருவரும் வேதாகமத்தை சேர்ந்து வாசித்து இயேசுவின் அன்பைக் குறித்து சிந்தித்தனர். தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முன்னர் அக்கைதி ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்று பிரிக்கன்ரிஜ் என்ற புதுப் பெயரும் பெற்றார்.

அவரை தூக்கிலிட்டபின் அவருடைய உடைமைகளை அவரது சிறை அறையிலிருந்து எடுத்துச் செல்ல அவரது உறவினர் வந்தனர். அப்போது அவரது தலையணைக்குக் கீழே ஒரு சிறு காகிதத்தில் இப்பாடல் எழுதப்பட்டிருந்தது.

இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் தன் வாழ்வின் அனுபவ வரியாக, சாட்சியாக பிரிக்கன்ரிஜ் எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அவரின் இறுதி நாட்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டு நம்பிக்கையுடன் கழிந்தது.

இயேசுவே நீர் என்னை நேசிக்க என்னிடம் ஒன்றுமில்லையே!

Tuesday, 10 April 2007

பிளவுண்ட மலையே

1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே.



பாடல் பிறந்த கதை:

காலத்தால் அழியாத இந்த அருமையான பாமாலைப் பாடலை இய்ற்றியவர் ரெவ.டாப்லடி என்பவர் ஆவார்.

இவர் ஒருமுறை பரந்த புல்வெளிகளடங்கிய பகுதியின் வழியாக பிரயாணம் சென்றபோது திடீரென ஒரு பலத்த காற்று வந்தது. அச்சமயம் அவர் அக்காற்றுக்கு தப்பும்படியாக ஒரு மறைவிடத்தை தேடினார். அது புல்வெளியாக இருந்த படியால் அங்கே ஒதுங்க இரு இடமும் இல்லை. ஆனால் ஒரு பிளவுண்ட பெரிய கல் இருந்தது. இவர் அந்த கல்லின் பிளவினுள் சென்று அந்த காற்றுக்கு தப்பித்துக் கொண்டார்.அவர் தமக்கு தேவையான நல்ல புகலிடத்தை அந்த பிளவுண்ட பாறையில் கண்டு கொண்டார். இதுவே இந்த பாடலினை எழுதுவதற்கான அடிப்படியாக இருந்தது.

இவர் தனது ஆராய்ச்சி ஒன்றில் ஐம்பது வயதுள்ள ஒரு மனிதன் 1005,76,00,000(ஆயிரத்து ஐந்து கோடி மற்றும் எழுபத்தாறு லட்சம்) பாவங்களை தன் வாழ்வில் செய்திருப்பான் என்று கணக்கிட்டு சொன்னார். நடைமுறையில் இவ்வளவு பாவங்களுக்கான மீட்பை மனித சக்தியில் செலுத்துவது இய்லாத காரியம். ஆகவே நியாயப் பிரமாணத்தின் சாபத்துக்கு நம்மை நீங்கலாக்கி சிலுவையில் மரித்த ஆண்டவராகிய இயேசுவின் இரக்கத்தையும் மன்னிப்பையும் ஒவ்வொரு பாவியும் பெறுவது அவசியம். பாவிக்கு புகலிடமாக நம்முடைய கன்மலையாகிய இயேசு பிளக்கப் பட்டிருக்கிறாரே. நாம் தேவனுடைய மகிமையைக் காணும் படியாக மோசேக்கு ஒரு கன்மலையின் பிளவை காண்பித்த தேவன் நமக்கு ஒரு இரட்சயண்ய கன்மலையாம் இயேசுவை தந்திருக்கிறாரே! நம்முடைய புகலிடமாகிய இயேசுவில் வந்து நாம் தஞ்சம் புகுவோம்.

Monday, 9 April 2007

ஏசுவையே துதி செய்

ஏசுவையே துதி செய் , நீ மனமே
ஏசுவையே துதி செய்

சரணங்கள்

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

2. அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க


பாடல் பிறந்த கதை:

எமனுக்குப் படிப்பு வந்தாலும்
இவனுக்குப் படிப்பு வராது!”

தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் இப்படிக் காட்டிக் கடிந்து கொண்டார். அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றான். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார். ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்.” எனத் தேற்றினார்.

சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!.

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், 1774-ம் ஆண்டு செப்டெம்பர் ஏழாம் தேதி பிறந்தார். தனது 12-வது வயதில் சுவார்ட்ஸ் ஐயரின் வழிநடத்துதலால், இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதுமுதல், அவர் தனது 90-வது வயதில் மரிக்கும்வரை, ஆண்டவர் தனக்குத் தந்த தமிழ்ப் புலமையைக் கொண்டு அவரைத் துதித்து, பல பாடல்களையும், நூல்களையும், பண்ணெடுத்துப் பாடினார். தஞ்சையை அந்நாட்களில் ஆண்டுவந்த சரபோஜி மன்னன், அவரது சிறுவயது நண்பரானார். அவர் சாஸ்திரியாரின் புலமையைப் பாராட்டித் தன் அரசவைக் கவிஞராக வைத்துக் கொண்டார். அவருக்கு மானியமும் வழங்கினார்.

குற்றாலக் குறவஞ்சி,” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சிஎன்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். இப்பாடல் நூலைத் தன் நண்பன் சரபோஜி மன்னனிடம் பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார்.

பின்னர் 1820-ம் ஆண்டு சரபோஜி, மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான். இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். ஏனெனில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான்.

வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து, ஆதரவளித்துவரும் அரசனின் வேண்டுகோள் ஒருபுறம், ஆனால் மற்றொருபுறம், தன்னையே தியாகம் செய்து, அவரைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த அன்பர் இயேசு ஒருவருக்கே செலுத்த வேண்டிய புகழ் ஆராதனை.

மிகுந்த மனப் போராட்டத்துடன், சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தனது தர்ம சங்கடமான நிலையை மனைவியிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார். “ஆண்டவரைப் பாடும் வாயால், இப்படியும் ஒன்றைப் பாடப் போகிறீர்களா? ” என்று கவலையுடன் அவர் மனைவி வினவினார். ஆனால், சாஸ்திரியாரின் உள்ளமோ, ஒரே தெய்வமாகிய, நிகரற்ற இறைவன் இயேசுவின் மீதுள்ள பக்தி வைராக்கியத்தால் பொங்கிப் பாடலாக வழிந்தது. அதுவே இப்பாடலாகும்.

பின்னர், சரபோஜி மன்னரிடம் சென்று, இப்பாடலைப் பாடினார். இறைப்பணியைக் கட்டுப்படுத்தும் பரிசில்களில், தனக்கு நாட்டமில்லை என்பதையும், ஆணித்தரமாகக் கூறினார். இப்பாடலையும் கேட்டு மகிழ்ந்த அரசன், இறைவன் இயேசுவின் மீது வேதநாயகம் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசப் பற்றைப் பெரிதும் பாராட்டினான். “உம் தெய்வத்தைப் பற்றி நீர் எங்கும் தடையின்றி எடுத்துக் கூற, என் அனுமதி உமக்குண்டு”. என்று கூறினான்.

வேதநாயக சாஸ்திரியார் படைத்த,
மனுவுருவானவனைத் தோத்தரிக்கிறேன்-மோட்ச
வாசலைத் திறந்தவனைத் தோத்தரிக்கிறேன்;;
கனிவினைத் தீர்த்தவைனத் தோத்தரிக்கிறேன்-
யூதக் காவலனை ஆவலுடன் தோத்தரிக்கிறேன்;
வேறு எவரையும் தோத்தரியேன்.”

என்ற மற்றொரு கவியிலும், அவரது சிறந்த பக்தி வைராக்கியம் தெளிவாக விளங்குகின்றதல்லவா? தென்னிந்தியத் திருச்சபைகளில் பொதுவாக உபயோகிக்கப்படும், தமிழ்க் கீர்த்தனைப் பாடல் புத்தகத்தில், அதிகமான பாடல்கள், வேதநாயக சாஸ்திரியாரால் எழுதப்பட்டவை, என்பது குறிப்பிடத்தக்கது

Sunday, 8 April 2007

ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே
சரணங்கள்

1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே

2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே

3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே

4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே

5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே

6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே


பாடல் பிறந்த கதை:

இயற்றியவர் - சாது கொச்சிக் குஞ்ஞு

சாது சுந்தர் சிங் அவர்களின் ஊழியத்தின் தாக்கத்தினால் பலரும் துறவற கோலம் பூண்டு சாதுவாக ஊழியம் செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாது கொச்சிக்குஞ்ஞு ஆவார். இவர் பல இடங்களுக்கும் சென்று சுவிசேஷ ஊழியம் செய்துவந்தார். இவர் தன் ஊழியத்தில் மெட்ராஸ் பட்டணத்தில் (இன்றைய சென்னை) ஒரு சிறிய வீடு ஒன்றை வாடகைகு எடுத்து ஊழியம் செய்து வந்தார்.அக்கால கட்டத்தில் அவரால் வீட்டு வாடகைபணத்தை கொடுக்க முடியாதவாறு வறுமையில் உழன்றார்.
பல மாதங்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வீட்டு உரிமையாளர் ஒரு நாள் கோபத்துடன் சாது அவர்களின் சாமான்களையெல்லாம் வீட்டைவிட்டு வெளியே எறிந்து, சாதுவையும் அடித்து கீழே தள்ளிவிட்டார். வலி தாளாமல் வேதனையுடன் கீழே விழுந்தவர்,ஆண்டவரே உம்முடைய ஊழியத்தை செய்கிற எனக்கு ஏன் இந்த நிலைமை? எனக்கு இப்போது தங்க வீடு இல்லையே என்று வேதனையுடன் இயேசுவை நோக்கிக் கதறினார். அப்போது அந்த க்ஷணத்தில் அவர் மனதில்,"மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" என்ற வசனத்தை ஆவியானவர் அவருக்கு நினைவு படுத்தினார். மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை , தனக்கு தெருவில் இந்த இடமாவது கிடைத்துள்ளதே என்று சிந்தித்தார். அந்த வேளையில் தானே அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவராய் எழுந்து நின்று சந்தோச மிகுதியால், அன்னிய பாஷையால் நிரப்பப்பட்டவராய்,

இந்த புவி ஒரு சொந்தமல்லவென்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் பக்தர்க்கு
இங்கேயே பங்காக கிடைத்திடினும்

ஆனந்தமே பரமானந்தமே இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே

கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்ரும் சொல்லலாமோ
கைவேல யல்லாத வீடொன்றை தந்திடுவேன்
என்று சொல்லிப் போகலையோ

ஆனந்தமே பரமானந்தமே இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே என்றுப் பாடிக்கொண்டு
தெருவில் நடனமாடத்துவங்கிவிட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டு உரிமையாளருக்கு ஒன்றுமே விளங்க வில்லை. நாம் இவனை அடித்து போட்டோம்,இவனோ இப்படி ஆடுகிறானே ஒருவேளை நாம் அடித்ததில் இவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று நினைத்துக் கொண்டு, சாதுவை நிறுத்த முயற்சி செய்தார். சாதுவோ தான் ஆடுவதை நிறுத்தாமல் தொடர்ந்து தேவனைப் பாடி, அன்னிய பாஷையில் துதித்துக் கொண்டிருந்தார். கடைசியாக ஒருவழியாக சாதுவை நிறுத்திய அந்த வீட்டின் உரிமையாளர் சாதுவிசம் அவரின் சந்தோசத்திற்காண காரணத்தை கேட்டார். சாது இன்னமும் தேவனை துதிப்பதை நிறுத்தாமல்," மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை- எனக்கு இந்த தெருவில் ஆண்டவர் ஒரு இடம் கொடுத்துள்ளாரே. என்னால் எப்படி சந்தோசமடையாமல் இருக்க முடியும் என்று கூறினார். இதைகேட்ட அந்த மனிதன் சாதுவின் உண்மையான ஊழியத்தை உணர்ந்து, "ஐயா, நீங்கள் எவ்வளவு மாதம் வேண்டுமென்றாலும் இந்த் வீட்டில் இருந்து ஊழியம் செய்ய்யுங்கள்.எனக்கு வாடகை எதுவும் தர வேண்டாம்" என்று கூறி தான் வீட்டை விட்டு வெளியே தூக்கியெறிந்த பொருட்களையெல்லாம் மறுபடியும் வீட்டினுள் எடுத்து வைத்து விட்டு சென்றார்.