Search This Blog

Thursday, 10 May 2007

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்

1. சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்

2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்

3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா -[2] -எந்தன்

4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீர் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே -[2] -எந்தன்


பாடல் பிறந்த கதை:

சென்னை மேடவாக்கத்திலுள்ள பாப்திஸ்து பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறுவர் சுவிசேஷ ஐக்கியத்தில் (CEF) முழு நேரப் பணியாளராகப் பணிபுரிந்த திருமதி சவுந்தரம் ஆசீர்வாதம், அப்பிள்ளைகளுக்கு கல்வாரி நாயகனாம் இயேசுவின் அன்பை, கண்ணீரோடு உருக்கமாய் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தார். இவர், பிரபலமான கிறிஸ்தவப் பாடகியும், தேவ ஊழியருமான சாராள் நவரோஜியின் தாயாராவார்.

அச்சிலுவைக் காட்சியில், இயேசுவின் தியாக அன்பை உணர்ந்த 14 வயது நிரம்பிய மாணவன் வின்சென்ட் சாமுவேல், தன் உள்ளத்தை இயேசுவிடம் ஒப்படைத்து ஜெபித்தான். புதுவாழ்வைப் பெற்றான். இரட்சிப்பின் பாதையில் தன் பெற்றோருக்கு முன்னோடியானான்.

பின்னர் தேவ ஊழிய அழைப்பை ஏற்ற இவ்வாலிபன், தனது திருமறைப் பேராசிரியராக 19 ஆண்டுகள் சென்னையின் பல இறையியல் கல்லு}ரிகளில் பணியாற்றினார். அதன்பின், 1982ம் ஆண்டில், அடையாற்றிலுள்ள MPA திருச்சபையின் போதகரானார். MPA திருச்சபையின் தலைமைப் போதகர் வாசுவின் மறைவிற்குப் பின், 1996ம் ஆண்டில், கல்வாரி கம்யூனிட்டி சபையைத் துவக்கி, தேவ கிருபையால் இன்றுவரை, ஆண்டவர் பணியை வெற்றிகரமாகத் தொடர்ந்து செய்து வருகிறார். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும், சுனாமிப் பேரழிவினால் பாதிப்புற்றோருக்கும் உதவிட, உலக தரிசன நிறுவனத்தின் நற்பணித் திட்டங்களை சிரமேற்கொண்டு, செயலாற்றி வருகிறார்.

போதகர் வின்சென்ட் சாமுவேலின் ஊழியங்களுக்கு ஆதாரமாக விளங்குவது ஜெபம் ஒன்றே. எனவே, 1989 ஆம் ஆண்டு. ‘ஜெபம்என்ற தலைப்பு, MPA திருச்சபையின் வருடாந்திர மறுமலர்ச்சிக் கூட்டத்தின் கருப்பொருளாக, அதின் தலைமைப் போதகர் வாசுவால் அறிவிக்கப்பட்டபோது, மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டார். வழக்கப்போல, இக்கூட்டங்களின் பாடல்களை எழுதும் பொறுப்பு, வின்சென்ட்டுக்குக் கொடுக்கப்பட்டது. வின்சென்ட் சாமுவேல் ஆண்டவரின் வழிநடத்துதலை வேண்டி ஜெபித்தார்.


போதகர் வின்சென்ட் சாமுவேலுக்கு ஆன்ட்ரு என்ற நண்பர் ஒருவர் உண்டு. இவர் சென்னையிலுள்ள லண்டன் மிஷனரி சிற்றாலயத்தைச் சேர்ந்தவர். எக்காள இசைக்கருவி வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். அவர் ஒரு இனிமையான இராகத்தை அமைத்தார். அதற்கேற்ற பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு, போதகர் வின்சென்ட் சாமுவேலிடம் கொடுத்தார். ஆண்டவர் தன் ஜெபத்தைக் கேட்டு, அந்த இராகத்தைத் தந்தாரென அறிந்தார். “எந்தன் ஜெபவேளைஎன்ற அருமையான இப்பாடலை இயற்றினார். MPA திருச்சபையின் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களில் இப்பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் பலரும் இப்பாடலை விரும்பிப் பாடவே, இப்பாடல் துரிதமாகப் பிரபலமானது.

இப்பாடலைப் பிரபல கிறிஸ்தவ இசைப் பாடகரான ஜாலி ஆபிரகாம் ஒலிநாடாவில் பாடினார். “என்னுடைய தனிப்பட்ட ஜெபவேளையில், நான் அடிக்கடி விரும்பிப் பாடுவது இப்பாடலையேஎன்று ஜாலி ஆபிரகாம் போதகர் வின்சென்ட் சாமுவேலிடம் தனது அனுபவ சாட்சியைப் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாறு, சென்னை MPA திருச்சபையின் வருடாந்திர கூட்டங்களுக்கென, ஒவ்வொரு ஆண்டும் பல இனிய பாடல்களை போதகர் வின்சென்ட் சாமுவேல் இயற்றி, இசை வழி இறைப்பணியாற்றியுள்ளார். இவற்றில் பல பாடல்கள் பிரபலமாகி, தமிழ்க் கிறிஸ்தவ சமுதாயத்தால் இன்றும் விரும்பிப் பாடப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் MPA திருச்சபையின் பாடல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இப்பாடல்களில் மிகப் பிரபலமானவை:

1. தேவ தேவனைத் துதித்திடுவோம்
2. பிரசன்னம் தாரும் தேவனே
3. இன்பமிதே பேரின்பமிதே
4. எக்காள சத்தம் வானில்
5. எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
6. கர்த்தாவே என் பெலனே
7. பரலோகமே என் சொந்தமே
8. தேசமே பயப்படாதே
9. விளைந்த பயனை அறுப்பாரில்லை
10. என் இயேசுவே நான் என்றும்
11. திருச்சித்தம் செய்திடவே
12. மகிமை மாட்சிமை
13. எந்தன் ஜெபவேளை
14. என் இன்ப துன்ப நேரம்

No comments:

Post a Comment