Search This Blog

Wednesday 5 January 2011

நெஞ்சே நீ கலங்காதே

பாடல் : தே. வேதநாயகம்
ராகம் : தே. வேதநாயகம

(1 பேதுரு 5:7 & யோவான் 14:1 )

பல்லவி
நெஞ்சே நீ கலங்காதே - சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே - நான் என் செய்வேனென்று.

அனுபல்லவி
வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும்
நெஞ்சே

சரணங்கள்
பட்டயம், பஞ்சம் வந்தாலும், - அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும்
மட்டிலா ‘வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்
கைவிட்டாலும்
-நெஞ்சே


சின்னத்தனம் எண்ணினாலும்,- நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்,
பின்ன பேதகம் சொன்னாலும், பிசாசு
வந்தணாப்பினாலும்
-நெஞ்சே

கள்ளன் என்று பிடித்தாலும், - விலங்கு போட்டுக்
காவலில் வைத்தடித்தாலும்,
வெள்ளம் புரண்டு தலைமீதில் அலை மோதினாலும்
-நெஞ்சே

……................................................
இப்பாடல் 1811-ம் ஆண்டு, வேதநாயக சாஸ்திரியார் இலங்கைக்கு நற்செய்திப் பணி செய்யக் குடும்பமாய்ச் சென்ற போது எழுதப்பட்டது.

சாஸ்திரியாரின் இலங்கைப் பயணம் முழுவதுமே, பல தடைகளை மேற்கொண்டு செய்ய நேரிட்டது. பாம்பனை அவர்கள் அடைந்த போது, காற்று சாதகமாக அமையாத காரணத்தால், சுமார் ஒரு மாத காலம் பாம்பனிலேயே தங்க வேண்டியதாயிற்று. அவர் கையிலிருந்த, பணமனைத்தும் செலவாகி, ஒரே ஒரு காசு மட்டும் மீதமிருந்தது. இந்நிலையில், சாஸ்திரியார், “தேவனால் எல்லாம் கூடும்,” என்ற வேத வாக்கை நமபியவராய், படகோட்டியைத் தயாராக இருக்கக் கூறி, தேவனைத் துதித்து, “வட காற்றருள் திரியேகா” என்ற பாடலை எழுதிப் பாடினார். அவர் பாடி முடிக்கு முன்னரே, காற்று அவர்களுக்குச் சாதகமாய் மாறியது.

யாழ்ப்பாணத்தில் போதகர் கிறிஸ்தியான் தாவீது, அவர்களை வரவேற்று, அவர்கள் அங்கு தங்கிய நாட்களெல்லாம், செலவுக்குப் பணம் கொடுத்துப் பராமரித்தார். அங்கு தங்கியிருந்த போது, வேதநாயக சாஸ்திரியார் குழு, சலவைக்காரனிடம் தங்கள் துணிகள் அனைத்தையும் தோய்க்கக் கொடுத்தனர். சலவைக்காரன் வீட்டில் திருடன் நுழைந்து, சாஸ்திரியாரின் குடும்பத்தினருடைய துணிமணிகள் அனைத்தையும் திருடிக் கொண்டு சென்றான். சலவைக்காரன் ஒடிவந்து, செய்தியைச் சாஸ்திரியாருக்கு அறிவித்தான்.

வேதநாயக சாஸ்திரியார் தீர விசாரித்து, தனது இக்கட்டான நிலையை அறிந்தார். அப்போது அவர் உள்ளம் திகைப்புற்றது. உடனே, தன்னைத் தேற்றிக் கொள்ள, ஆண்டவன் துணையை நாடி, இப்பாடலை, அவ்வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு பாடலானார்.

அப்போது, அத்தெருவின் வழியே வந்த ராமசாமி என்ற இந்து புகையிலை வியாபாரி, சாஸ்திரியாரின் பாடலைக் கேட்டு ரசித்து மயங்கினார். அப்பாட்டின் வார்த்தைகளின் மூலம், சாஸ்திரியாரின் நிலைமையைப் புரிந்து கொண்டார். ஆண்டவர் அனுப்பிய நல்ல சமாரியனாக, அவர், இரண்டு புடவைகளையும், நானூறு ரூபாய் பணத்தையும் கொடுத்து உதவினார். இன்னும் தேவைகள் இருப்பின், அதையும் தான் தருவதாக வாக்களித்தார்.

ஆண்டவரின் அதிசய வழிநடத்துதலால் அகமகிழ்ந்த வேதநாயக சாஸ்திரியார், இலங்கையின் நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று, நற்செய்தித் தொண்டாற்றினார்.

1 comment:

  1. Praise The Lord sister ur blogs info is so nice and also help me to my life grow in spritually..thanks a lot i pray for continue ur work sis.............

    ReplyDelete