Search This Blog

Monday, 9 May 2011

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி
செய்து முடித்தோர் – அழகாய்

2. காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள் – அழகாய்

3. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் – அழகாய்

4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் – அழகாய்

5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று – அழகாய்

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும், அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை – அழகாய்

7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே – அழகாய்
...........

ஆண்டவரின் கட்டளைப்படி, அவரது நாமத்தின் வல்லமையைக் கொண்டு தங்கள் ஊழியத்தை நிறைவேற்றி வெற்றியுடன் திரும்பிய சீஷர்கள், தாங்கள் செய்த அற்புத ஊழியங்களை மகிழ்வுடன் உற்சாகமாய் விவரித்தனர். அமைதியாய்க் கேட்ட ஆண்டவர், அந்த அற்புதங்களைக் காட்டிலும் சிறந்த அற்புதமாக, அவர்கள் நித்திய ராஜ்ஜியத்தின் சுதந்தரவாளிகளானதைச் சுட்டிக்காட்டி, “உங்கள் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதே! அந்த மாபெரும் அற்பதத்தை எண்ணிச் சந்தோஷப்படுங்கள்” என்றார்.

ஆம், ஜீவ புத்தகத்தில் நம் பெயர் உண்டா? யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷத்தில் எழுதியுள்ளபடி இந்த ஜீவ புத்தகம் திறக்கப்படும். அதில் இடம் பெற்ற பெயர்கள் வாசிக்கப்பட்டு, அப்பரிசுத்தவான்கள் பரலோகில் பிரவேசிக்கும் பாக்கியம் பெறுவார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உத்தமத்துடன் பின்பற்றி, உன்னதத்தின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு உலகைக் கடந்த பரிசுத்தவான்கள், மேகம் போன்ற திரளான சாட்சிகளாக, இவ்வரிசையில் இடம் பெற்றுவிட்டார்கள்.

விஷ்வவாணியின் ஸ்தாபகரான சகோதரர் எமில் ஜெபசிங், இக்கருத்தைத் தன் மனதில் கொண்டு, இப்படிப்பட்ட பரிசுத்தவான்களைத் தன் நினைவில் நிரந்தரமாக வைத்திருப்பது வழக்கம். ஒரு குறிப்பிட்ட நாளிலே, இப்படிப்பட்ட நினைவுடன், தனக்கு அருமையான, சாத்தான் குலத்தைச் சேர்ந்த பரிசுத்தவான் திரு காபிரியேல் ஸ்டீபனையும், தனது பெற்றோர் மறைத்திரு லு.ஊ நவமணி ஐயரையும், கிரேஸ் அம்மையாரையும் எண்ணி, ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது இன்றைய உலகில் தொடரும் தனக்கும் நேரம் வரும்பொழுது, அந்த அழகான வரிசையில், பரிசுத்தவான்களுடன் நிற்க வேண்டும் என் ஜெபிக்கலானார். அவ்வாறு ஜெபித்த நிலையில், அவர் உள்ளத்தில் இப்பாடல் உருவானது.

ஆண்டவர் தரும் நிலையான சமாதானத்தை, மனஅமைதியின்றித் தவிக்கும் இவ்வுலக மக்களுக்கு நற்செய்தியாக எடுத்துச் செல்லும் ஊழியர்களின் பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாய் இருக்கின்றன என்ற ஏசாயா தீர்க்கத்தரிசியின் விமரிசனத்தை உள்ளத்தில் நிறுத்தி, இவ்வுலக வாழ்வில் ஆண்டவருக்காக, அவர் தந்த தாலந்துகளைக் கொண்டு ஊழியம் செய்தால், நித்திய வாழ்வில் பன்மடங்கு ஆசீர்வாதங்களை நாம் பெறுவது நிச்சயமென்ற கருத்தை இப்பாடலில் நாம் காணலாம்.

மூன்றே சரணங்களுடன் சகோதரன் இயற்றிய இப்பாடல் பிரபலமானது. எனவே, பின் நாட்களில்,

“காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்;:
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள்.”


போன்ற பல சரணங்களைப் பலர் இப்பாடலுடன் இணைத்துப் பாடுகின்றனர்.

சகோதரர் எமில் ஜெபசிங், நாம் இவ்வுலகில் ஆண்டவரைத் துதித்துப் போற்ற வேண்டும், அவருக்காக நற்சாட்சியுடன் வாழ வேண்டும், அவரது ஊழியத்தில் உற்சாகமாக ஈடுபட வேண்டுமென, நம்மை ஊக்குவிக்கும் பல பாடல்களை எழுதியிருக்கிறார். அத்துடன் நித்திய பரம ராஜ்ஜியத்தைப் பற்றிய இப்படிப்பட்ட பல பாடல்களையும் இயற்றியிருக்கிறார்.

No comments:

Post a Comment